சட்டசபை நாடகம். குடி அரசு - தலையங்கம் - 10.04.1932 

Rate this item
(0 votes)

ஏழை மக்களுடன் பழகி, ஏழைமக்களாகவே வாழ்கின்ற ஏழை மக்கள் தான் அவர்களுடைய துன்பங்களை நீக்க உண்மையாகப் பாடுபட முடியுமே யொழிய ஏழைமக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு பதவி வகித்து வருகிற வேறு எந்தப் பணக்கார முதலாளிகளும் அவர்களின் துன்பத் தைப் போக்கப்பாடுபடமுடியாது என்று நாம் அடிக்கடி சொல்லி வருகிறோம். 

இதற்கு உதாரணம் வேண்டுமானால் நமது இந்தியா சட்டசபையின் நிகழ்ச்சிகளையும் மாகாண சட்டசபைகளின் நிகழ்ச்சிகளையும் கவனித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும். இச்சமயத்தில் சென்ற 4-4-32 உ இந்திய சட்டசபையில் இந்திய ராணுவ சம்பந்தமான முக்கிய விஷயம் பற்றி விவாதம் நடக்கும்போது சபையில் பல உறுப்பினர்களின் ஸ்தானங்கள் காலியாக இருந்தனவாம். இதை திரு. எஸ்.சி. மித்திரா அவர்களும், சட்டசபைத் தலைவரும் எடுத்துக்காட்டி கண்டித்தனர். அப்போது தலைவர் கண்டித்துக் கூறியதாவது: 

"சட்டசபைக் கூட்டத்திற்கு பலர் வரவில்லை என்றும், சிலர் வந்து விட்டுத் திரும்பி விட்டார்கள் என்றும், சபையில் அதிக மெம்பர்கள் இல்லை யென்றும், திரு. எஸ். சி. மித்திரா கூறியதைக் கவனிக்க வேண்டும். ஆகையால் வாக்காளர்களே இதைக் கவனியுங்கள், 

தேர்தல் காலத்தில் ஏராளமாகச் செலவு செய்து படாதபாடுபட்டு சட்டசபைப் பதவி பெறுகிறவர்கள் பிறகு சபைக்கூட்டத்திற்கு வருவதைப்பற்றிக் கவலை கொள்வதில்லை. இத்தகைய மெம்பர்களிடம் அனுதாபம் காட்ட முடியாது. 

என்று மிகவும் அழுத்தமாக உறுப்பினர்களின் செய்கையைத் தலைவர் கண்டித்திருக்கின்றார். 

இவ்வாறு சட்ட சபைக் கூட்டங்களுக்கே சரியாகப் போகமுடியாத நமது பிரதிநிதிகள் எவ்வாறு நமது நன்மைக்காகக் கவலையுடன் பாடுபடுவார் கள் என்று யோசித்துப்பாருங்கள். 

 

இவர்கள் ஏழைகளின் நன்மைக்காகவோ, சீர்திருத்தத்திற்காகவோ, பாடுபடாமல் போனாலும், சட்டசபையில் சில மெம்பர்களால் கொண்டு வரப் படும் நல்ல தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போடாமலாவது இருக்கிறார் களா என்று பார்த்தால் அப்படியும் இருப்பதில்லை . 'மதம்' 'கடவுள்' *வேதம்' 'பழமை' தெய்வீகம்' பழக்க வழக்கம்' என்னும் பெயர்களினால் அவைகளை எதிர்த்து தீமை செய்யச் சிறிதும் பின்வாங்குவதில்லை. 

இதற்கு உதாரணம் வேண்டுமானால் இந்திய சட்ட சபையில் திரு. சாரதா அவர்களால் விதவைகளுக்குச் சொத்துரிமை வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட மசோதாவைத் தோற்கடித்ததும், திரு. அரிசிங்கோர் அவர்களால் விவாக விடுதலை செய்து கொள்ளுவதற்கு உரிமை வழங்கக் கொண்டுவந்த மசோதாவின் விவாதத்தின் போது சபையில் குவாரம் இல்லாமற் போகுமாறு சபை மெம்பர்கள் சபையை விட்டு வெளியேறியதும் ஆகிய காரியங்களே போதுமானதாகும். 

அல்லாமலும் பால்ய விவாகத்தைத் தடுக்கும் சாரதா சட்டத்தைத் தொலைக்க வேண்டும் என்பதற்காகவே சட்டசபையில் ஆதி முதல் ஒரு கூட்டம் சூழ்ச்சி செய்து கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கொண்டும் அறியலாம். 

ஆகவே இந்திய சட்டசபை மெம்பர்களின் நாடகத்தையறிய, அச் சபைத் தலைவர் கூறிய அபிப்பிராயமும், நாம் காட்டிய இரண்டொரு உதாரணங்களுமே இச்சமயத்தில் போதுமானதென்று கருதுகிறோம். சமயம் நேரும்போது மற்றொரு முறை இது பற்றி எடுத்துக் காட்டுவோம். 

இனி நமது மாகாண சட்டசபையைப் பற்றி மாத்திரம் கொஞ்சம் கவனித்தால் மற்ற மாகாண சட்டசபைகளின் நாடகங்களும் நன்கு விளங்கும். 

நமது மாகாண சட்டசபையில் சென்ற கூட்டங்களில் நடந்த காரியங் கள் முழுதும் அனேகமாகத் தேர்தலுக்காகச் செய்யப்பட்ட பிரசாரங்களும், பிரசங்கங்களும், கேள்விகளுமாக இருந்தனவேயன்றி வேறு யாதொன்றும் நடைபெற்றதாகத் திட்டமாகக் கூறமுடியாது. 

ஒரு மாஜிஸ்திரேட் சட்டமறுப்புச் செய்து அதன் பொருட்டு அபராதம் விதிக்கப்பட்ட ஒரு பெண். தன்னிடம் அபராதம் கொடுக்கப் பணமில்லை என்று சொல்லியபோது,அப்பெண் கழுத்திலிருந்த தாலியைக் கொடுவென்று கேட்டதைப் பற்றிய பேச்சு, சட்டசபை ஆரம்பம் முதல் முடிவுவரையிலும் இருந்து கொண்டே வந்தது. இதன் பொருட்டு, அந்த மாஜிஸ்திரேட் வருத்தந்தெரிவித்தும், அரசாங்கத்தாரும் அச்செய்கையைக் கண்டித்துங்கூட சட்டசபை மெம்பர்கள் அப்பேச்சை விட்டு விடவேயில்லை. 

தாலியைத் தெய்வத் தன்மையாகக் கருதிக் கேள்விகள் கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிய இந்த மெம்பர்கள், கணவனையுடைய பெண்கள், வைதீகர்களின் கொள்கைப்படி, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பிறவி குணங்களை விட்டு விட்டுச் சட்டமறுப்புச் செய்ய பகிரங்கமாக வெளிவந்ததனால், அவர்களுடைய “தெய்வீகத் தன்மை போய்விட்டது என்பது பற்றி ஏன் அப்பெண்களைக் கண்டிக்கவில்லை என்று கேட்கின் றோம். உண்மையில் இவர்கள் தாலியின் "தெய்வீகத்தன்மையை அறிந்து அதற்காக இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்றால் அதில் சிறிதும் அர்த்தமே இல்லையென்பது தான் நமது அபிப்பிராயம். 

அடுத்தபடியாக அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்ட விஷயம்; டாக்டர். பேட்டன் அவர்களைச் சென்னைப் போலீசார் அடித்ததும், அவர் மீது வழக்குத் தொடுத்ததுமாகிய விஷயமாகும். இது பற்றி இந்திய மந்திரியுள் பட அரசாங்கத்தார் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தும் நமது சட்டசபை மெம்பர்கள் சும்மா விட்டுவிடவில்லை கேள்விகளுக்குமேல் கேள்விகள் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். 

இன்னும் தடியடிகளைப் பற்றியும், பிரம்படிகளைப் பற்றியும் கேட்ட கேள்விகளுக்கு அளவேயில்லை. அரசாங்கத்தாருடைய அடக்குமுறை களைப்பற்றியும். அவசரச் சட்டங்களைப் பற்றியும், கண்டித்துத் தீர்மானங்கள் கொண்டு வருவதும், சரமாரியாகக் கேள்விகள் கேட்பதும் ஆகிய காரியங்க ளில் தான் ஏறக்குறைய எல்லா மெம்பர்களும் ஊக்கமெடுத்துக் கொண்டு காலத்தைக் கடத்தினார்களேயன்றி, வேறு நாட்டுக்கு - மக்களுக்குப்பிரயோச னகரமான காரியங்கள் எதையும் உருப்படியாகச் செய்து முடித்தார்கள் என்று கூறுவதற்கு இடமில்லை. உண்மையிலேயே நமது சட்டசபைப் பிரதிநிதிகள், நமது தேசமக்களின் நன்மைகளைக் கவனிக்கக் கூடியவர்களாய் இருந்தால், ஏழை மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் இவர்களின் நன்மைக்காக ஏதேனும் செய்திருக்க வேண்டும். 

நமது தேசமக்களில் கோடிக்கணக்கான பேர், உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும், இருக்க இடமின்றியும், ஒவ்வொரு நாளும், பட்டினியினாலும், பசியினாலும், நோய்களினாலும் மடிந்து வருகின்றனர். இவர்களுடைய துன்பங்களைப் போக்க ஒரு மார்க்கமும் தேடாமல் இருக் கின்றனர். 

விவசாயிகளோ, அகவிலைக் குறைவினாலும், வரிச் சுமையினாலும், கடன் சுமை தாங்கமாட்டாமல் நாளுக்கு நாள் பாப்பராகிக் கொண்டே வரு கின்றனர். இவர்கள் துன்பத்தைப் போக்க ஒரு மார்க்கமும் இல்லை. ஆனால், "சிக்கனம்' 'சிக்கனம்' என்பதைப் பற்றிய பேச்சு மாத்திரம் பலமாக இருந்து வருகிறது. இந்த சிக்கனப் பேச்சினால் யாருக்கும் நன்மை இல்லை. சிக்கனம் என்ற பெயரினால், பத்துப் பன்னிரண்டு. இருபது முப்பது சம்பளம் வாங்கும் கீழ் தர வேலைக்காரர்களுக்குக் கஷ்டமும், ஆபத்தும் ஏற்பட்டதே ஒழிய வேறு ஒரு நன்மையும் இல்லை. ஆயிரக்கணக்காக சம்பளம் வாங்குபவர்கள், நூற்றுக்குப்பத்து வீதம், பதினைந்து வீதம் குறைத்துக் கொண்டார்கள் என்று பெருமையாகப் பேசப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான சம்பளக்காரர் களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. 

உண்மையிலேயே சிக்கனம் செய்வதனால் நன்மை யேற்பட வேண்டு மானால், ஆயிரக்கணக்கான சம்பளம் வாங்கும் உத்தியோகஸ்தர் களின் தொகையைக் குறைத்து ஏராளமான சம்பளத்தையும் குறைத்து, விவசாயி களின் வரிச்சுமையைக் குறைத்திருக்க வேண்டும். இதற்கு யாரும் கவலை எடுத்துக் கொண்டார்கள் என்று கூறமுடியாது. 

அடுத்தபடியாக தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றியும் யாரும் கவலைப் படவே இல்லை. சிக்கனத்தின் பெயரால், ரயில்வேயிலும் மற்றும் தொழிற்சாலைகளிலும், சொற்ப கூலி பெறும் தொழிலாளர்களைக் குறைத்துக் கொண்டு வருகின்றனர். ஆனால், ஆயிரக்கணக்காக சம்பளம் வாங்கும் உயர்ந்த உத்தியோக பதவிகளில் யாதொரு சிக்கனமும் நுழைவதில்லை. இந்தப் பரிதாபகரமான நிலையைக் கவனித்து ஏழைத் தொழிலாளர்களுக்கு நன்மை செய்ய நமது சட்டசபைப் பிரதிநிதிகள் யாதொரு முயற்சியும் எடுத்துக் கொள்ளக் காணோம். 

இவ்வாறு நமக்கு தற்போது தேவையாயுள்ள முக்கியமான காரியங் களின் மேல் கவனமில்லாமல், சுயராஜியம் என்று ஆர்ப்பாட்டம் பண்ணு வதும், அரசாங்கத்தாரின் தவறுகளையே சதா எடுத்துக் காட்டி கொண்டிருப் பதுமாகிய காரியங்களையே எப்பொழுதும் சட்டசபையில் செய்து கொண்டிருப்பதனால் நமக்கு என்ன நன்மை உண்டாகப் போகின்றது? 

தற்போது நமது நாட்டில், வியாபார மந்தமும். பொருளாதார நெருக்கடி யும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஏற்படுவதற்குக் காங்கிரசால் செய்யப் படும் சட்டமறுப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை இந்த சட்டசபை மெம்பர் கள் உணராதவர்கள் அல்லர். ஆயினும், அவர்கள் காங்கிரசின் செயலைக் கண்டித்துப் பேச முன்வருவதே இல்லை. காங்கிரஸ்காரர்கள் போல் அரசாங் கத்தாரை மாத்திரம் கண்டிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வரு கின்றனர். இது எதற்காக? தேர்தல் பிரசாரம் பண்ணுவதற்காகவா? அல்லவா? என்று நினைத்துப்பாருங்கள்! 

சட்டசபைஸ்தாபனங்களில் கெட்டியாக உட்கார்ந்து கொண்டு உருப் படியான காரியங்கள் ஒன்றும் செய்யாமல் சட்டமறுப்பைப் பற்றியும், தடியடிகளைப் பற்றியும், சிறைத் தண்டனைப் பற்றியும், அபராதத்தைப் பற்றியும் வீண் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரகர்களே என்றுதான் நாம் கூறுகின்றோம். இவர்கள் உண்மையிலேயே சட்டமறுப்பிலும், காங்கிரசிலும், பற்றுடையவர்களாயிருந்தால் இவர்களும். காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு சட்டமறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போக வேண்டும். அப்படியில்லாமல் சௌக்கியமாகச் சட்டசபை ஸ்தானங்களில் உட்கார்ந்து கொண்டு அரசாங்கத்தாரை மாத்திரம் கண்டித்துப் பேசிவிடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? 

இவ்வாறு அரசாங்கத்தாரை கண்டிப்பதின் மூலம். தங்களைத் தேசீயவீரர்கள் என்று பாமர மக்கள் நினைக்கும்படி செய்து கொண்டு அதை அடுத்தத் தேர்தலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளத்தான் இக்காரியம் செய்கின்றார்கள் என்பதில் என்ன சந்தேகம்? 

ஆகையால் இந்திய சட்டசபைத் தலைவர், வாக்காளர்களுக்கு எச்சரிக்கை செய்தது போல நாமும், நமது மாகாண வாக்காளர்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகின்றோம். சட்டசபையின் வேலையைக் கெடுத் துக் கொண்டு தேசாபிமானியென்ற பட்டத்திற்காக வீண் ஆர்ப்பாட்டங்கள் புரியும் பிரதிநிதிகளையெல்லாம் கவனித்துக் கொள்ளுமாறு வாக்காளர் களுக்குக் கூறுகின்றோம். 

குடி அரசு - தலையங்கம் - 10.04.1932

 
Read 60 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.